Wednesday, November 11, 2009

லா.ச.ரா

லா.ச.ராமாமிர்தத்தின் Introspective Writing எல்லாரும் அறிந்ததே.
”கணுக்கள்” என்று ஒரு சிறுகதை.அதில், நாசூக்காகப்பேசிப் பேசிக்காரியத்தைச் சாதிக்கிற ஒரு பெண்ணின் பாத்திரம் வரும்.அவளது அந்த சுபாவத்தைச் சித்தரிக்க,அவர் எழுதிய உவமை “மாம்பூவைக் காம்பாய்ந்தாற் போல்”. இந்த உவமையின் பிண்ணனி சுவாரசியமானது.பெண்ணின் பாத்திரத்தை சித்தரிக்க சரியான உவமை கிடைக்காததால் கணுக்கள் கதையை லா.ச.ராவால் முடிக்க இயலவில்லை.ஒருநாள்,இதை யோசித்துக்கொண்டு தூங்கி விட்டாராம்.கனவில், ஒரு வெறும் சுவர்,அதில் ஒரு கரிக்கட்டி தானே “மாம்பூவைக்காம்பாய்ந்தாற்போல்” என்று எழுதியதாம்.இதுவே சரியான உவமை என்று எண்ணி அப்படியே கணுக்கள் கதையில் எழுதி கதையை முடித்தாராம்(மாம்பூ ரொம்ப நளினமானது, அதன் காம்பாய்வது ரொம்ப கடினம்).சரியான உவமை கிடைக்காததால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு கணுக்கள் கதையை முடிக்காமல் வைத்திருந்தார் என்று படித்த ஞாபகம்.

சொற்சிக்கனம் படைப்பின் வீரியத்தை அதிகப்படுத்தும் என்பதில் அபார நம்பிக்கைகொண்டவர்.இவரது படைப்புகளில் இது நிதர்சனம்.

சொற்பிரயோகத்தைப்பற்றி அவரின் விளக்கம் ”சொல்லோடு என் உறவு” கட்டுரையிலிருந்து:

"குந்துமணிகள் பூமியில் பொடிக்கற்களுடன் சேர்ந்து இறைந்து கிடக்கின்றன.ஒரு பக்கம் சிவப்பு,ஒரு பக்கம் கறுப்பு,இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும்,பிள்ளையார் பார்வையில் என்ன உயிர்! என்ன உக்கிரம்! சிவந்த விளிம்பில் கறுவிழியாக குந்துமணி மாறி விடுகிறது.என்ன தத்ரூபம்!அப்போது தோன்றுகிறது.அந்தக்குந்துமணி இல்லாமல் பிள்ளையார் இல்லை.ஆனால்,பிள்ளையாரில்லாவிடில் குந்துமணிக்குப் பலனும் இல்லை,பயனும் இல்லை.பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவு இதுபோல்தான் என்று சொல்லலாம்.ஆகவே, சொற்கள் வெறும் உமியாகிவிடுவதோ,கத்தியை இட்ட உறையாக மாறுவதோ,சொற்களைப்ப்ரயோகம் செய்வதைப்பொறுத்தது”.

Saturday, October 10, 2009

ஜேகே

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும்போது, சுஜாதாவின் படைப்புகளிலிருந்து நான் ரசித்ததை இதில் குறிப்பிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். காரணம்,அவர் படைப்புகளையும்,அவற்றில் ரசித்ததையும் குறிப்பிட ஆரம்பித்தால் இந்த வலைப்பதிவு சுஜாதாவுக்காகவே தாரை வார்க்கப்பட்ட ஒரு வலைப்பதிவு என்று ஆகி இருக்கும்.

இப்பொழுது இங்கு பதிவது,சுஜாதாவை என்னுடன் சேர்ந்து வியக்கும் நண்பர்கள் சாட்டில் இல்லாததாலும்,இன்று அலுவலகம் விடுமுறை என்ற காரணத்தாலும்.

இன்று இன்னொரு முறை ஜேகே படித்தேன்.இக்கதை வெளியான ஆண்டு 1971 இறுதியில்.இவற்றில் பல வரிகள் ரசிக்க வைத்தன.ஆச்சர்யம் கொள்ள வைத்தன என்பதே சரி.அவற்றில் சில வரிகள் கீழே:

1. நண்பர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் ஜேகே பைலட்,ஸ்டண்ட் நடிகன்,காதலன்,அடிபட்டவன்,அடிப்பவன்,எல்லாவற்றையும் ஒருமுறை பதம் பார்த்தவன்(நீங்கள் நினைப்பது உட்பட).

2.1,500 அடியில் பறந்து சிவப்பு முண்டாசுடன் அடையாளத்துக்கு நிற்கும் விவசாயிகளை நோக்கி,
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம் என்று இயங்கி,50 அடியில் பறந்து,
மருந்தைச்சிதற அடித்துவிட்டு,மறுபடி ஏறி,மறுபடி இறங்கி நூறு அடி தள்ளி,
மறுபடி போன வரியை சேர்த்துக்கொள்ளவும்.
(இக்கதையின் நாயகன் ஜேகே வயல்களுக்குப்பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தின் பைலட்).


3.மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் கதைகளில் விதி சிரிக்குமே;அதுபோல, அப்போது என் அறையில் அலமாரி ஓரத்தில் ஹேர் ஆயில் பாட்டில் அருகில் விதி சின்னதாக உட்கார்ந்திருந்தால் சிரித்திருக்கும்.

4.ஆம்லெட் வந்தது.....ஸாஸைச்சேர்த்துக்கொண்டு ஸ்லைஸைக் கடித்துக்கொண்டு முள்குத்தி அதை விழுங்கினேன்.நல்ல பசி! இல்லாவிட்டால் இந்த மாதிரி ஆம்லெட்டைச் சாப்பிடுகிற ஜாதி இல்லை நான்.....

5.அவன் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் கதாநாயகி ‘சேகர்’ என்று ஓடி வருவதைப்போல் என் விமானத்தை நோக்கி ஓடி வந்தான்.

6.”நான் என் லாயரை கலந்து கொள்ளாமல் ஒரு வார்த்தை பேச மாட்டேன்” என்றேன், எட்டு வார்த்தைகளில்.

7. கான்ஸ்டபிள் விஷமமாக,கிருஷ்ண பரமாத்மா போல சிரித்தார்.

Monday, October 5, 2009

சிகரங்களில் உறைகிறது காலம்

சமீபத்தில் வாசித்த கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்” கவிதைத்தொகுப்பில் எனக்குப்பிடித்த கவிதை:

மேசையின் விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப்போல் உள்ளது
நம்பிக்கை

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக்காத்திருக்கிறது
திரவம்

எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே காலியாய் இருப்பதில்லை மேசை.

Wednesday, September 30, 2009

இராமாயணம்

இராமாயணம் முழுவதும் எண்ணிலடங்காத உவமைகள்.அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு உவமை கீழே:

கைகேயி இராமர் பதினான்கு வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்,பரதன் முடிசூட வேண்டும் ஆகிய இரண்டு வரங்களைப்பெறுகிறாள்.இராமர் கோசலையை விட்டுச் செல்லும்போது, தசரதனின் முக்கிய மந்திரியாகிய சுமந்திரர் இராமருக்கு இரதம் ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் செல்கிறார்.ச்ருங்கவேர்புரம்(குகனுடைய நாடு) என்ற இடத்தில் இராமர்,சீதை,இலக்குவன்,சுமந்திரர் ஆகியோர் அங்கு சில நாட்கள் குகனுடன் தங்கிவிட்டு சுமந்திரர் இராமரிடத்தில் விடைபெற்று கோசலைக்கு திரும்பிச் செல்கிறார்.

கோசலை சென்றவுடன் மன்னர் தசரதரிடம் “.இராமரின் பிரிவினால் கோசல நாட்டில் அசையும் அசையாததுமான ஜீவன்களெல்லாம் துயரம் நிறைந்த நிலையில் இருப்பதை வழிநெடுகக் காணநேர்ந்தது” என்றார்.

இதைக்கேட்ட தசரதன் இவ்வாறு அறிவித்தான் “நான் துயரக்கடலில் மூழ்கிவிட்டேன்.இதனின்று வெளி வருவது கடினம்.இந்தத்துயரக்கடலின் கரைகள் கைகேயியின் இரு வரங்கள்,இராமருடைய வனவாசம் இக்கடலின் விஸ்தாரம்.நான் உள்ளும் புறமும் விடுகின்ற சுவாசமானது கடலின் அலைகள்,துயரத்தால் இருகைகளையும் தூக்கி வீசுகின்றேனே அது அக்கடலில் துள்ளும் மீன்கள்.என் விரிந்த தலை கேசங்கள் கடலின் காளான்கள்.நான் கதறும் கதறல் துயரக்கடலின் கடலோசை,கைகேயி ஆனவள் துயரக்கடலின் அடியில் தோன்றும் தீயானவள்.அந்தத்தீயானது என்னுடைய கொதிக்கும் கண்ணீரின் காரணமாகும்.மந்தரையின் வார்த்தைகள் கடலுக்குத்தொல்லை அளிக்கும் முதலைகளாகும்.

Thursday, July 2, 2009

உதயண குமார காவியம்

உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் உஞ்சைக்காண்டத்தில் 3வது பாடல்:

மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.

இப்பாடலின் பொருள்:
மாணிக்கம் முதலிய மணிகளை இட்டுப் பொதிந்துள்ள துணியை,அந்த மணிகளைத் தன்னுள் கொண்டிருந்த காரணத்தினாலே, அத் துணியை இகழாமல் அந்த மணிகளோடே சேர்ந்து நன்கு மதித்து வைப்பார் உலகத்தினர். அது போலவே, அறிஞர்கள் பிறருடைய சொற்கள் குற்றமுடைய சொற்களாக இருந்தாலும்,அச்சொற்கள் தூய்மையுடைய நல்ல உறுதிப்பொருளைத் கொள்ளுமிடத்து, அணிகலண்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்வர்.

Saturday, June 20, 2009

கனிமொழி

அகத்திணை,கருவறை வாசனை போன்ற கனிமொழியின் கவிதைத்தொகுப்புகளில் எனக்குப்பிடித்தது அகத்திணை. நெடிய தமிழ் மரபின் தொடர்ச்சியாக கனிமொழியின் கவிதைகளைக் காணலாம் என்ற நஞ்சுண்டனின் வாக்கியத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அற்புதமான கவிதைத் தொகுப்பு.இத்தொகுப்பில், கனிமொழியின் பெரும்பான்மையான கவிதைகள் என்னைக்கவர்ந்தன.அவற்றில் ஒன்று,

எத்தனைமுறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பப் புரண்டு
மேலே கால் தூக்கிப்போடும்
குழந்தையாய் நினைவுகள்.

இந்தக்கவிதைப்பொருளின் உவமையை விளக்கும் அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

Tuesday, June 16, 2009

நகுலன்

நகுலனின் ”யாத்திரை” குறுநாவலிலிருந்து ஒரு உவமை.

நகுலன் வழக்கமாக தனது படைப்புகளில் உலவவிடும் நவீனனின் எழுத்துப் பிரேமையையும்,எழுத்துப் பற்றிய நவீனனின் எண்ணங்களையும் விவரிப்பதாக அமைந்துள்ளது இந்த உவமையின் சூழல்.

“இந்த எழுதும் விஷயம் நவீனனுக்கு எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான காரியமாகப்பட்டது.அவனுக்கு ஆங்கிலக்கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் எழுதுவதைப் பற்றிக் கூறியது ஞாபகம்.

அதில் அவன் வற்புறுத்தியதெல்லாம் அனுபவத்திற்கும் எழுத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதுதான் என அவனுக்குத்தோன்றியது.ஏனெனில்,அப்பொழுதுதான் அனுபவத்தைச் சாட்சி பூதமாக நம்மால் பார்க்க முடிகிறது.ஒரு கலைஞன் தன்னை அறியாமலே தன்னைத் தயாரித்துக்கொள்கிறான்.தன்னை வளர்க்கும் உலகில் தானும் ஒன்றாக அமிழ்ந்த பால் உணர்ச்சி விழித்தெழுவது போல குறிப்பிட்ட சமயம் வரும்போது எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறான் என்று அவனுக்குத் தோன்றியது”.

Thursday, June 11, 2009

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்

ॐ त्रयम्बकं यजामहे सुगंधिम पुष्टिवर्धनम
उर्वा-रुकमिव भंधानात मृत्योर-मुक्षीय माँ अम्रितात

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வா ருகமிவ பந்தாநாத் ம்ருத்யோர்முக்‌ஷீய மாஅம்ரிதாத்

முக்கண்ணனை, நாற்றத்தின் நேரியனை, செல்வம் உயர்த்துவோனான உன்னை நான் வணங்குகிறேன் - ஐயா, எவ்வாறு பழுத்த வெள்ளரி, கொடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறதோ, அதே போன்று,எங்களையும்,ஜனனம்,மரணம்,மறுபிறப்பு போன்ற சுழற்சியிலிருந்து விடுவித்து,மோக்ஷத்தை தரும் அமிர்தம் அருள்வாய்.

கனியாகி விழும்போது கனிதான் கழன்று விழும், ஆனால் வெள்ளரி மட்டும் பழுக்குங்கால் பழம் அங்ஙனமே இருக்கும், கொடி நகர்ந்து / பிரிந்து / விட்டு விலகி செல்லும்.

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் - சில குறிப்புகள்

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ரிக் வேதத்தில் உள்ளது(மண்டலம் 7-அத்தியாயம் 59).இம்மந்திரம்,ருத்ர மந்திரம் என்றும்,த்ரயம்பக மந்திரம் என்றும்,ம்ரிதசஞ்சீவனி மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சுக்கிரன், இந்திரனுடன் மேற்கொண்ட சவாலில் வெற்றிபெற,அக்னியின் புகை உடலில் ஏற, மரத்தில் தலைகீழாக தொங்கி இருபது வருடம் தவம் செய்தான்.இந்திரன் தனது தோல்வியை சுக்கிரனிடம் ஒப்புக்கொண்டவுடன்,சிவ பெருமான் சுக்கிரனின் உடல் பழைய நிலையை அடைய இந்த மந்திரத்தை போதித்தார்.இந்த மந்திரத்தை பின்நாளில்,சுக்கிரன் பிரஹஸ்பதிக்கு போதித்து,ப்ரஹஸ்பதி மூலம் தேவர்களுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதே மந்திரம் வசிஷ்டரிடம் லோகக்ஷேமத்துக்காக அளிக்கப்பட்டது.

நான்கு பாதங்களும்,ஒவ்வொரு பாதத்திலும் எட்டு அசைகளையும்(அனுஷ்டுப் சந்தம்) கொண்ட இந்த மந்திரோபதேசத்தை, சுக்கிரன்,ததீசன் என்ற முனிவருக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

சுக்கிரன் ததீசனிடம் வழங்கிய இம்மந்திரத்தின் பொருள் கீழே:

முதல் பாதம் - த்ரயம்பகம் யஜாமஹே..அதாவது,த்ரயம்பகனை வணங்குகிறோம்.த்ரயம்பகன் என்பது சிவபெருமானைக்குறிக்கும்(த்ரய என்றால் மூன்று,அம்பகம் என்றால் கண்கள்). மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்குகிறோம்.இதுவே முதல் பாதத்தின் பொருள். மேலும்,சிவபெருமான் பூ,புவ,ஸ்வர்க்க ஆகிய மூன்று லோகங்களுக்கும், சூர்ய,சோம,அக்னி போன்ற மூன்று மண்டலங்களுக்கும் தந்தை.சாத்வ,ரஜோ,தமோ ஆகிய மூன்று குணங்களை உள்ளடக்கிய மகேஸ்வரன்.ஆத்ம தத்வம்,வித்யா தத்வம்,சிவ தத்துவம் போன்ற மூன்று தத்துவங்களைக் கொண்ட சதாசிவன்.அவனே ஆவாஹனீயம்,க்ரஹபத்யம்,தக்‌ஷிணாக்னி போன்ற மூன்று சக்திகளின் பிறப்பிடம்.

இரண்டாம் பாதம் - சுகந்திம் புஷ்டிவர்த்தனம்.அதாவது,எவ்வாறு மலரின் சுகந்தம் எல்லா திசைகளிலும் பரவி இருக்கிறதோ,அதேபோல், சிவனும் பஞ்சபூதங்களிலும்,பத்து இந்திரியங்களிலும்,மூன்று குணங்களிலும்,எல்லா கணங்களிலும் பரமாத்மாவாக பரவி இருக்கிறான்.ப்ரக்ருதியின் நிலைத்த தன்மையை அளிக்கும் அம்சம் சிவபெருமானிடம் இருக்கிற காரணத்தால் புஷ்டிவர்த்தனன் எனவும் அழைக்கப்படுகிறான்.

மூன்று மற்றும் நான்காம் பாதம் - உர்மருகமிவ பந்தாநாத் ம்ருத்யோர் முக்க்ஷீ‌ய மாஅம்ரிதாத்
அதாவது,எவ்வாறு பழுத்த வெள்ளரி, கொடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறதோ, அதே போன்று,எங்களையும்,ஜனனம்,மரணம்,மறுபிறப்பு போன்ற பிறவியின் சுழற்சியிலிருந்து விடுவித்து,மோக்ஷத்தை தரும் அமிர்தத்தை அருள்வாய்.

மேற்சொன்ன பாதங்களுக்கு கீழ்க்கண்டவாறும் அர்த்தம் கொள்ளலாம்.
உர்வம் என்றால் சக்தி வாய்ந்த,ரோகம் என்றால் வியாதி.பந்தாநாத் என்றால் பிணைப்பு.ம்ருத்யோர்முஷீ‌ய என்றால் மரணத்திலிருந்து விடுவிப்பது.மாஅம்ரிதாத் என்றால் அமுதம் வேண்டுவது.அதாவது, நாங்கள் சக்தி வாய்ந்த,மரணத்தை வரவழைக்கும் வியாதிகளால் பீடிக்கப்பட்டுள்ளோம்(இப்பெருவியாதிகளுக்கும் மூன்று குணங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.அவித்யை-அறியாமை,அசத்-தவறான உணர்வுகளைப் பின்பற்றுதல் ,ஷத்ரிபு - பலவீனம்).இந்த மரணத்திலிருந்து விடுவித்தும்,ஜனனம் மற்றும் மரணம் போன்ற பிறவிச்சுழற்சியில் ஈடுபடுத்தாமல் மோக்‌ஷத்தை அடையும் அமிர்தத்தை அளிப்பாயாக என்றும் பொருள் கொள்ளலாம்.

Thursday, June 4, 2009

திருக்குறள்

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

(குறள்-1087-இன்பத்துப்பால்-தகையணங்குறுத்தல் அதிகாரம்)

பெண்ணின் சரியாத மார்பகங்களின் மேல் அமைந்த கச்சு,மதயானையின் மேல் இரு மத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்திய முகபடாத்தை ஒத்திருக்கிறது.

முலைக்கச்சு,முகபடாத்துடன் ஒப்பிடப்பட்டிருப்பதன் காரணம்,முகபடாத்தின் தோற்றப்பொலிவும்,அது யாவரும் தொட முடியாததான இடத்திலிப்பதுமாகும்.
யானைப்பாகன் தவிர,வேறு யாரும் முகபடாத்தைத் தொடமுடியாதது போல, ஆடவரில் தலைவன் தவிர வேறு யாரும் பெண்ணின் முலைக்கச்சைத் தொட இயலாது என்பதை உணர்த்தவே இந்த உவமை.

Wednesday, June 3, 2009

கம்பராமாயணம்

”ஓசை பெற்று உயர் பாற் கடல் உற்றுஒரு
பூசை முற்றவு நக்கு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
காசில் கொற்றத்து இராமன் கதையரோ”

அலைகளையுடைய பாற்கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கியே குடித்து வற்ற வைக்க நினைக்கும் பேராசையே நான் இராமனைப் பாடுவதும் என்று பாலகாண்டத்தில் ஆரம்பிக்கும் அற்புதமான உவமைகள் கம்பராமாயணம் முழுவதும் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன.
இவற்றில், நான் ரசித்த ஒரு உவமை கீழே:


”சிங்கக் குருளைக் கிடும் தீஞ்சுவை ஊனை
நாயின் வெங்கண் சிறு குட்
டனை ஊட்ட விரும்பினளே
நங்கைக்கு அறிவின் திறம்
நன்றிது,நன்றிது என்னாக்
கங்கைக்கு இறைவன்
கடக்கை புடைத்து நக்கான்”.

ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும், பரதன் முடிசூட வேண்டும் என்று கைகேயி தசரதனிடத்தில் வரம் கேட்கிறாள்.இவ்வரத்தைக்கேட்டு, தசரதன் இராமனிடம்,நீ கானகம் புகும்முன் நான் வானகம் புகுவேன் என்று புலம்புகிறான்.

இவ்வரத்தைக் கேட்ட இலக்குவன் சீறுவதாகக் கம்பன் வடித்துள்ளதே மேற்சொன்ன வரிகள்.இதன் அர்த்தம்,
”சிங்கக்குட்டி உண்ண வேண்டிய சுவையான மாமிசத்தை,கொடிய ஒரு சிறுநாய்க்குட்டிக்கு உணவாகப் போடுகிறாளே இந்த கைகேயி! நன்றாக இருக்கிறது,மிக மிக நன்றாக இருக்கிறது” எனக் கைகொட்டி சிரிக்கிறானாம்.

Tuesday, June 2, 2009

அறிமுகம்

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும்போது,சம்பிரதாய உவமைகளைத்தவிர்த்து,நிறைய சுவாரசியமான உவமைகள் படித்து ரசித்ததுண்டு. மேலும் கடினமான விஷயங்களை சிறந்த எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் சுலபமாக விளக்குகிற புத்தகங்களையும் படித்ததுண்டு.இதுபோல ரசித்தவை ஏராளம்.அவ்வாறு நான் படித்து ரசித்த உவமைகளையும்,எடுத்துக்காட்டுகளையும்,இன்ன பிற ரசனை சார்ந்த விஷயங்களையும் இந்த வலைப்பதிவில் தொகுக்க எண்ணம்.